செய்திகள்

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை ஏன்? - சி.பி.ஐ. இணை இயக்குனர் விளக்கம்

Published On 2017-05-16 14:05 GMT   |   Update On 2017-05-16 14:05 GMT
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது குறித்து சி.பி.ஐ. இணை இயக்குனர் விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி:

ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததாக புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. நேற்று இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதில், ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி, கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் பெயர்கள் இருந்தன. இதுதவிர கார்த்தி சிதம்பரம், பத்மா விஸ்வநாதன் நடத்தும் நிறுவனங்கன் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த சூழ்நிலையில், சென்னையில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதுதவிர மும்பை, டெல்லி, குருகிராமம் பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 14 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனை குறித்து டெல்லியில் சி.பி.ஐ. இணை இயக்குனர் வினித் விநாயக் விளக்கம் அளித்தார்.

சென்னையில் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான இடங்களில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைத் தேடும் வகையில் சோதனையில் ஈடுபட்டோம். தேடுதலுக்கான வாரண்டை பெற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கார்த்தி சிதம்பரம் பங்குதாரராக உள்ள நிறுவனத்தில் தவறான தகவல் தரப்பட்டுள்ளது. முரண்பாடான கணக்கை வழங்கிய அட்வான்டேஜ் நிறுவனத்திற்கு கார்த்தி சிதம்பரம் நெருங்கியவர் என தெரியவந்தது. எனவே, இந்த வழக்கில் முதற்கட்டமாக சட்டப்படி எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது.

தற்போது நடத்தப்பட்ட சோதனை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News