செய்திகள்

சிறப்பாக பணியாற்றியதற்காக சென்னை மண்டல அமலாக்கப் பிரிவுக்கு விருது: அருண் ஜெட்லி

Published On 2017-04-29 22:06 GMT   |   Update On 2017-04-29 22:06 GMT
டெல்லியில் நடைபெற்ற விழாவில், சிறப்பான முறையில் பணியாற்றியதற்காக சென்னை மண்டல அமலாக்கப் பிரிவுக்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விருது வழங்கினார்.
புதுடெல்லி:

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த்துறை சார்பில் அமலாக்க தின விழா டெல்லியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில், அமலாக்கப் பிரிவில் சிறப்பாக பணியாற்றிய மண்டலம் மற்றும் சிறந்த அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விருதுகளை மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி வழங்கினார்.

2016-2017-ம் ஆண்டில் சிறந்த அமலாக்கப் பிரிவு மண்டலமாக தேர்வு செய்யப்பட்ட சென்னை மண்டல அலுவலகத்துக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இணை இயக்குனர் பிரசாத் பெற்றுக்கொண்டார்.

இதைபோல் சிறந்த செயல்திறனுக்கான விருது, ஜலந்தர் மண்டல அலுவலகத்துக்கும், பணமோசடி தடுப்பு சட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்கான விருது, மும்பை மண்டல அலுவலகத்துக்கும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த செயல்திறனுக்கான தனிநபர் விருதுகள் 6 பேருக்கு வழங்கப்பட்டன.

தனிநபர் விருதை, சென்னை அமலாக்கப் பிரிவின் உதவி இயக்குனர் வி.கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். சென்னையைச் சேர்ந்த இவர், கலால் துறையில் பணியாற்றி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிக பணிமாற்ற அடிப்படையில் அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் மற்றும் பணமோசடி தடுப்பு சட்டங்களின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பிலான, சட்டத்துக்கு புறம்பான பண பரிமாற்றத்தை இவர் கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழாவில் நிதி மந்திரி அருண் ஜெட்லி பேசுகையில், வரி விதிப்பு சட்டங்களை மக்கள் மதித்து நடக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

வரி விதிப்பு சட்டங்கள் மீறப்பட்டால் அதை கண்டுபிடித்து தடுக்கும் அதிகாரம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உள்ளது என்றும், அந்த சட்டங்களை திறம்பட அமல்படுத்துவதன் மூலம் அரசின் வருவாயை பெருக்க அமலாக்கப் பிரிவு உதவியாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் அப்போது அவர் கூறினார். 
Tags:    

Similar News