செய்திகள்

கற்பழிப்பு வழக்கில் உ.பி. முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி சஸ்பெண்ட்

Published On 2017-04-29 16:59 GMT   |   Update On 2017-04-29 16:59 GMT
கற்பழிப்பு வழக்கில் உத்தர பிரதேச முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியை ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்துள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் காய்த்ரி பிரஜாபதி மீது இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்தார். அந்த பெண்ணின் மகளையும் கற்பழிக்க முயன்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கடந்த மாதம் 15-ம் தேதி காயத்ரி பிரஜாபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கற்பழிப்பு வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று கூறிய காயத்ரி பிரஜாபதி, ஜாமீன் கேட்டு போக்ஸோ கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட், பிரஜாபதி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு சார்பில், அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், முன்னாள் அமைச்சர் காயத்ரி பிரஜாபதியின் ஜாமீனை நிறுத்தி வைத்தது.

இந்நிலையில், கற்பழிப்பு வழக்கில் காயத்ரி பிரஜாபதிக்கு ஜாமீன் வழங்கிய, போக்ஸோ கோர்ட் நீதிபதி ஓம் பிரகாஷ் மிஸ்ராவை அலகாபாத் ஐகோர்ட்டு சஸ்பெண்ட் செய்து உள்ளது.

காயத்ரி பிரஜாபதி போக்ஸோ கோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், தன் மீது எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை என கூறியிருந்தார். ஆனால், அவர் மீது 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. எனவே, உண்மைகளை மறைத்து ஜாமீன் பெற்றதால், ஜாமீனை நிறுத்தி வைத்தது ஐகோர்ட்.

அதேசமயம், ஆராய்ந்து பார்க்காமல் அவசரம் அவசரமாக ஜாமீன் வழங்கியதால், போக்ஸோ கோர்ட் நீதிபதி ஓம் பிரகாஷ் மிஸ்ராவை ஐகோர்ட் சஸ்பெண்ட் செய்துள்ளது. ஓம் பிரகாஷ் மிஸ்ரா நாளை ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News