செய்திகள்

குற்றவாளிக்கு தண்டனை குறைப்பு: கேரள அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

Published On 2017-04-29 04:04 GMT   |   Update On 2017-04-29 04:04 GMT
சவுமியா கொலை வழக்கில் குற்றவாளி கோவிந்தசாமி மீதான தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கேரள அரசின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
புதுடெல்லி:

கேரளாவை சேர்ந்த சவுமியா என்ற பெண் 2011-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டு கோவிந்தசாமி என்பவரால் கற்பழிக்கப்பட்டார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சவுமியா பின்னர் பரிதாபமாக உயிர் இழந்தார். முதலில் கற்பழிப்பு வழக்காக இதை பதிவு செய்த கேரள போலீசார் பிறகு கொலை வழக்காக மாற்றினர்.

வழக்கை விசாரித்த கேரள விரைவு கோர்ட்டு கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. கேரள ஐகோர்ட்டும் இந்த தண்டனையை உறுதி செய்தது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில், கோவிந்தசாமி மனுதாக்கல் செய்தார். அப்போது அவர் மீதான கொலை வழக்கை ரத்து செய்து கற்பழிப்பு வழக்கை மட்டும் உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு கோவிந்தசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள்தண்டனையாக குறைத்தது.

இதையடுத்து, கேரள அரசு கோவிந்தசாமி மீதான தண்டனையில் திருத்தம் கோரும், அதாவது ஏற்கனவே விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்யுமாறு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 6 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நேற்று முன்தினம் தலைமை நீதிபதியின் அறையில் வைத்து விசாரணை நடத்தியது. அப்போது வழக்கு ஆவணங்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News