செய்திகள்

நான் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்ட்: பாகிஸ்தான் பயணியின் செய்கையால் டெல்லி ஏர்போர்ட்டில் திடீர் பரபரப்பு-விசாரணை

Published On 2017-04-28 16:37 GMT   |   Update On 2017-04-28 16:37 GMT
துபாயில் இருந்து டெல்லி வந்த பாகிஸ்தான் பயணி ஒருவர், தான் ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு என கூறியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயணி இறங்கினார்.

அவர் நேராக விமான நிலையத்தில் ‘ஹெல்ப் டெஸ்க்’ கவுன்டரில் பணியில் இருந்த பெண்ணை நாடி, ‘‘நான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு (ஐ.எஸ்.ஐ. என்பது பாகிஸ்தான் உளவு அமைப்பு). அந்த வேலையில் தொடர விரும்பவில்லை. இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். ஐ.எஸ்.ஐ. பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ஊழியர், உடனடியாக விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து, அந்த நபரை பிடித்து சென்று விசாரண நடத்தினர். விசாரணையில் அவர், முகமது அகமது ஷேக் முகமது ரபிக் என்ற பெயரில் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருந்தார்.

மேலும், 38 வயதான அந்த ரபிக், டெல்லியில் இருந்து காத்மாண்டு நகருக்கு விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அந்த விமானத்தில் ஏறாமல், நேராக ஹெல்ப் டெஸ்க் கவுண்டருக்கு வந்து பேசியுள்ளார்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘‘நான் ஐ.எஸ்.ஐ.யில் இருந்து விலகிவிட்டு, இந்தியாவில் தங்கி இருக்க விரும்புகிறேன்’’ என கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை ஒரு ரகசிய இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News