செய்திகள்

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் செம்மரங்கள் ரூ.996 கோடிக்கு ஏலம்

Published On 2017-04-28 05:26 GMT   |   Update On 2017-04-28 05:26 GMT
ஆந்திராவில் 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 260 டன் செம்மரங்கள் அரசு சார்பில் ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 996 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
திருமலை:

ஆந்திர மாநில வனத்துறை மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சர் சித்தா ராகவராவ் திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

செம்மர கடத்தலை தடுக்க ஆந்திர அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடத்தலை தடுக்க வனத்துறை மற்றும் செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் தீவிரமாக செயல்பட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து செம்மரக் கட்டைகளை தொடர்ந்து பறிமுதல் செய்வதுடன் அவர்களை கைது செய்தும் வருகின்றனர்.

2015ம் ஆண்டு முதல் தற்போது வரை கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4 ஆயிரத்து 260 டன் செம்மரங்கள் ஆந்திர அரசு சார்பில் ஏலம் விடப்பட்டது. இதன் மூலம் அரசுக்கு 996 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

மேலும் 2 ஆயிரத்து 15 டன் செம்மரங்களை விற்பனை செய்ய மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருக்கிறோம். விரைவில் மத்திய அரசின் அனுமதி கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 8 ஆயிரத்து 650 டன் செம்மரங்கள் கிடங்குகளில் இருப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News