செய்திகள்

டெல்லி நகராட்சி தேர்தல் வெற்றி: பா.ஜ.க.வுக்கு வாழ்த்து கூறிய அரவிந்த் கெஜ்ரிவால்

Published On 2017-04-26 12:12 GMT   |   Update On 2017-04-26 12:13 GMT
டெல்லிக்கு உட்பட்ட மூன்று நகராட்சிகளை கைப்பற்றியுள்ள பா.ஜ.க.வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி வளர்ச்சிக்காக தமது அரசு இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லிக்கு உட்பட்ட கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய மூன்று நகராட்சிகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தொடக்கம் முதலே பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்த பா.ஜ.க, அதிக இடங்களில் வெற்றி பெற்று மூன்று நகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.

டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி மூன்று நகராட்சிகளிலும் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், தேசிய கட்சியான காங்கிரஸ் 25 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகின்றது. தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மாக்கான் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி செய்து பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளாதாக தேர்தல் முடிவுகள் குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ,” 3 நகராட்சிகளிலும் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.வை வாழ்த்துகிறேன். டெல்லி மேம்பாட்டிற்காக எனது அரசு, நகராட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர் நோக்கி உள்ளேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Similar News