செய்திகள்

டி.டி.வி.தினகரன் கைது: சசிகலா அதிர்ச்சி

Published On 2017-04-26 05:01 GMT   |   Update On 2017-04-26 05:01 GMT
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்த சசிகலா அதிர்ச்சியடைந்தார்.
பெங்களூரு:

இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் கமினுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.



இந்த தகவல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு இன்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஏற்கனவே சசிகலா குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுக்கும் சம்பவங்கள் நள்ளிரவில் நடந்து வருகின்றன. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தன்னை நியமித்து கொண்ட சசிகலா, முதல்-அமைச்சர் பதவியில் அமர ஆசைப்பட்டார். அவர் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவரால் முதல்-அமைச்சர் பதவி ஏற்க முடியவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.



அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று தேர்தல் கமி‌ஷனில் மனு கொடுக்கப்பட்டு அந்த மனு விசாரணையில் இருந்து வருகிறது.

மேலும் ஜெயலலிதாவின் நம்பிக்கை பாத்திரமாக இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி சென்னையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென்று தியானம் மேற்கொண்டார்.

பின்னர் அவர் சசிகலா குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். இதுவும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது.



கடந்த மாதம் 23-ந் தேதி நள்ளிரவு இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. இதுவும் சசிகலாவிற்கு அதிர்ச்சியை கொடுத்தது. கடந்த 9-ந் தேதி நள்ளிரவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் ஆர்.கே. நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. இதுவும் சசிகலாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த 18-ந் தேதி அ.தி.மு.க. அம்மா அணியில் இருந்து டி.டி.வி.தினகரனை நீக்குவதாக அறிவித்தனர். இந்த நிலையில் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டு இருப்பது சசிகலாவிற்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Similar News