செய்திகள்

வீடியோ: 4 வயது பெண் குழந்தையை சந்திக்க காரை நிறுத்திய பிரதமர் மோடி

Published On 2017-04-17 11:43 GMT   |   Update On 2017-04-17 11:43 GMT
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் பாதுகாப்பு வளையத்தை மீறி தன்னை சந்திக்க சாலையை கடந்து ஓடிவந்த குழந்தையை சந்திப்பதற்காக பிரதமர் மோடி தனது காரை நிறுத்தச் சொன்ன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அகமதாபாத்:

குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, சூரத் நகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு, டெல்லி செல்வதற்காக இன்று பிற்பகல் விமான நிலையம் நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

பிரதமரின் கருப்புநிற காருக்கு பின்னாலும் முன்னாலும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் அணி வகுத்து வந்தன. அவர் பிறந்து, வளர்ந்த மாநிலம் என்பதால் பிரதமரை பார்ப்பதற்காக சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான ஆண்களும், பெண்களும் திரண்டிருந்தனர்.

பிரதான சாலையில் உள்ள ஒரு நான்முனை சந்திப்பின் அருகே பிரதமரின் கார் வந்தபோது, சாலையோரம் தனது பெற்றோருடன் நின்றிருந்த நான்குவயது பெண் குழந்தை திடீரென்று பிரதமர் மோடிக்கு ‘டாட்டா’ காட்டியவாறு காரை நோக்கி குறுக்கே ஓடியது. அதற்குள் சாலையோரம் பாதுகாப்புக்காக நின்றிருந்த ஒரு போக்குவரத்து காவலர் அந்தக் குழந்தையை தடுக்க முயல்கிறார்.


முன்னேறிச் செல்வதா? பின்னால் வருவதா? என்பது புரியாமல் பதற்றமடைந்த குழந்தையின் நிலையை பார்த்துவிட்ட பிரதமர் மோடி, காரை நிறுத்துமாறு டிரைவரிடம் தெரிவித்தார். தனது மெய்க்காப்பாளர்களிடம் கூறி அந்தக் குழந்தையை தன்னிடம் தூக்கி வருமாறும் அவர் உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்படி, காரின் முன் இருக்கை அருகே தூக்கி வரப்பட்ட அந்தப் பெண் குழந்தையை கட்டியணைத்து, தனது மடியில் அமரவைத்து செல்லமாக சில வார்த்தைகளை பேசிய பிரதமர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பிரதமரின் குஜராத் சுற்றுப் பயணத்தை பதிவு செய்ய அவருடன் சென்ற பிரபல செய்தி சேனல் ஒளிப்பதிவாளர்கள் இந்தக் காட்சியை படமாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு யூடியூபில் பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ காட்சி, மாலைமலர் டாட்காம் வாசகர்களின் பார்வைக்கு...,,


Similar News