செய்திகள்

உத்தர பிரதேசத்தில் விரைவு ரெயில் தடம்புரண்டது: 12 பேர் படுகாயம்

Published On 2017-03-30 05:20 GMT   |   Update On 2017-03-30 05:20 GMT
உத்தர பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் விரைவு ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 12 பயணிகள் படுகாயம் அடைந்தனர். தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
லக்னோ:

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் இருந்து டெல்லி நிஜாமுதீன் நோக்கி நேற்று இரவு மகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயில் உத்தர பிரதேச மாநிலம் மகோபா ரெயில் நிலையம் அருகே இன்று அதிகாலை 2 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

மகோபா-கல்பகார் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்த இந்த விபத்தில், 8 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கி கவிழ்ந்தன.



விபத்து பற்றி தகவல் அறிந்த ரெயில்வே துறை அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினருடன் விபத்து மீட்பு ரெயிலை அனுப்பி வைத்தனர். அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்துவருகின்றன.



இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்திருப்பதாகவும், உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு வடக்கு ரெயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் விரைந்தனர். அந்த ரெயிலில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விபத்து பற்றிய தகவல்களை அறிந்துகொள்ளும்  வகையில் ஜான்சி, குவாலியர், பாண்டா மற்றும் நிசாமுதீன் ஆகிய ரெயில் நிலையங்களில் தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Similar News