செய்திகள்

விவசாயிகள் கடன் தள்ளுபடி: எதிர்க்கட்சிகளின் அமளியால் மராட்டிய மேல்சபை ஒத்திவைப்பு

Published On 2017-03-24 09:27 GMT   |   Update On 2017-03-24 09:27 GMT
மராட்டிய மாநில விவசாயிகளின் கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் இன்று நாள் முழுவதும் மேல்சபை கூட்டத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
மும்பை:

கடந்த ஆண்டில் பருவமழை பொய்த்து விட்டதால் மராட்டிய மாநிலத்துக்கு உட்பட்ட பல மாவட்டங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டது. விளைநிலங்களை வைத்துள்ள விவசாயிகள் பயிர் விளைச்சலும் கருகிப் போனது. இதனால், அரசு, கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனிநபர்களிடம் விவசாயத்துக்காக வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.

இவர்களில் சிலர் தற்கொலை செய்து தங்களது உயிர்களை மாய்த்து கொண்டுள்ளனர். மேலும் பலர் தற்கொலை முயற்சியின்போது உறவினர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என மாநில் அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த ஆறாம் தேதி தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தின்போது இதுதொடர்பான அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.

இந்நிலையில், மராட்டிய மாநில சட்டசபையின் மேலவை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், விவசாயிகளின் கடனை ஆளும் பா.ஜ.க. அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என கோஷமிட்டபடி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.



அவர்களை சமாதானப்படுத்த முயன்ற துணை சபாநாயகர் மானிக்ராவ் தாக்கரேவின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

Similar News