செய்திகள்

அதிகாரியை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. விமானத்தில் பறக்க வாழ்நாள் தடை

Published On 2017-03-24 07:20 GMT   |   Update On 2017-03-24 07:20 GMT
அதிகாரியை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி. விமானத்தில் பறக்க வாழ்நாள் தடை விதிக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். இவர், புனாவில் இருந்து டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார்.

இவர், விமானத்தில் உயர் மதிப்பு கொண்ட பிசினஸ் கிளாஸ் வகுப்பில் டிக்கெட் பதிவு செய்து இருந்தார். ஆனால், அவருக்கு குறைந்த மதிப்பு கொண்ட எக்கனாமிக் கிளாஸ் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதனால் கோபம் அடைந்த ரவீந்திர கெய்க்வாட் டெல்லி சென்றதும் விமானத்தில் இருந்து இறங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவரை விமான நிலைய ஏர் இந்தியா மேலாளர் சிவக்குமார் நேரில் சென்று சமாதானப்படுத்த முயன்றார்.

ஆனால், கடும் கோபத்தில் இருந்த ரவீந்திர கெய்க்வாட் மேலாளர் சிவக்குமாரை செருப்பால் பல முறை அடித்தார். மேலும் சட்டையை கிழித்தார். அவரது மூக்கு கண்ணாடியையும் உடைத்து எறிந்தார்.


இந்த சம்பவத்தால் ஏர் இந்தியா அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதனால் ரவீந்திர கெய்க்வாட் எம்.பி. மீது கடும் நடவடிக்கை எடுக்க ஏர் இந்தியா முடிவு செய்தது.

இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தரும்படி துணை பொது மேலாளருக்கு உத்தரவிட்டது. அவர் உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுத்தார்.

விமானத்தில் பயணம் செய்பவர்கள் தவறாக நடந்து கொண்டால் விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்க விதிகள் உள்ளது.

அதன்படி ரவீந்திர கெய்க்வாட் எம்.பி. வாழ் நாள் முழுவதும் ஏர் இந்தியா விமானத்தில் பறப்பதற்கு தடை விதிக்க முடிவு செய்தனர். இதில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஏர் இந்தியா சேர்மனுக்கு உள்ளது. அவரிடம் இதற்கான கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவர் அனுமதி அளித்ததும் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும்.

இதேபோல் தனியார் விமானங்களிலும் அவர் பயணம் செய்வதற்கு தடை விதிக்கவும் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

மேலும் அதிகாரி தாக்கப்பட்டது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் புகார் செய்யப்பட்டது. அவர் மீது 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதிகாரியை தாக்கிய தாகவும், விமானத்தை செல்ல விடாமல் 40 நிமிடம் தடுத்ததாகவும் 2 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Similar News