செய்திகள்

தமிழகத்திற்கு வறட்சி நிதியாக ரூ.1748.28 கோடி வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2017-03-23 12:04 GMT   |   Update On 2017-03-23 12:04 GMT
தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வேண்டும் என தமிழக அரசு கேட்டுள்ள நிலையில், ரூ.1748.28 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி:

தமிழ்நாட்டில் அக்டோபர் 1-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை வட கிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மில்லிமீட்டர் மழை கிடைக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் வடகிழக்கு பருவ மழை பொய்த்தது. 168.03 மில்லி மீட்டர் மழைதான் பெய்தது.

140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவான மழை பெய்ததால் கடும் வறட்சி ஏற்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவியது. அணைகள் வறண்டு விட்டன. விவசாயம் பொய்த்து விட்டது.

இதை தொடர்ந்து தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தியது.

தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என்றும், மத்திய குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய குழு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளித்தது. அதில், தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2096.80 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திடம் மத்திய குழு பரிந்துரை செய்துள்ளது. இதேபோல், மத்திய தேசிய குழுவின் துணை கமிட்டி தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.1748.28 கோடி வழங்க பரிந்துரை செய்து உள்ளது.

இதையடுத்து தமிழகத்திற்கு எவ்வளவு வறட்சி நிவாரணம் வழங்கலாம் என்பது குறித்து டெல்லியில் இன்று நடந்த உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது மத்திய குழுக்கள் அளித்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் ஆயவு செய்யப்பட்டன. இறுதியில், துணை கமிட்டி பரிந்துரைத்த தொகையான ரூ.1748.28 கோடியை தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, ரூ.1748.28 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை மத்திய வேளாண்துறை மந்திரி ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினால் தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். இது யானைப் பசிக்கு சோளப்பொரி என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும், வறட்சி நிவாரணம் கேட்காத மாநிலங்களுக்கு மத்திய அரசு அள்ளிக் கொடுப்பதாகவும், தமிழகத்தை ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

Similar News