செய்திகள்

உ.பி.யில் மந்திரிகளின் இலாகாக்கள் ஒதுக்கீடு: ஆதித்யநாத் வசம் உள்துறை

Published On 2017-03-22 14:40 GMT   |   Update On 2017-03-22 15:55 GMT
உத்தர பிரதேச மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள மந்திரிகளுக்கான இலாகாக்களை முதல்வர் ஆதித்யநாத் இன்று ஒதுக்கீடு செய்துள்ளார். அவர், உள்துறை உள்ளிட்ட பல முக்கிய துறைகளை தன் வசம் வைத்துள்ளார்.
லக்னோ:

உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.  முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவருடன் 2 துணை முதல்-மந்திரிகள் உள்பட 46 மந்திரிகளும் பதவியேற்றனர். இந்நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது அமைச்சரவையில் இடம்பெறுள்ள மந்திரிகளுக்கான இலாகாக்களை இன்று ஒதுக்கியுள்ளார். கவர்னர் உத்தரவின்பேரில் இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, முதல்வர் யோகி ஆதித்யநாத், உள்துறை, தகவல் தொடர்பு, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல், உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், சுரங்கம், பணியாளர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை தன் வசம் வைத்துள்ளார்.

துணை முதல்வர் கேசவ் பிரசாத் மயூர்யாவுக்கு பொதுப்பணித் துறை, உணவு பதப்படுத்துதல், கேளிக்கை வரி மற்றும் பொது நிறுவனங்கள் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு துணை முதல்வரான தினேஷ் சர்மாவுக்கு உயர்கல்வி மற்றும் மேல்நிலைக்கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முக்கிய துறையான நிதித்துறையானது ராஜேஷ் அகர்வாலுக்கும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சித்தார்த் நாத் சிங்கிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

ரீட்டா பகுகுணா ஜோஷி பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேமம்பாடு மற்றும் சுற்றுலாத் துறை வழங்கப்பட்டுள்ளது.

Similar News