செய்திகள்

பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் பெண்களுக்கு 90 நாள் விடுப்பு: மத்திய அரசு அறிவிப்பு

Published On 2017-03-20 20:19 GMT   |   Update On 2017-03-20 20:19 GMT
மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானால், அவர்களுக்கு விசாரணை காலத்தில் 90 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சக ஊழியர் அல்லது உயர் அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகும்போது, அது குறித்து விசாரிக்க அந்தந்த நிறுவனங்களில் சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த விசாரணை காலத்தில் குற்றம் இழைத்த நபர்கள் தரப்பில் இருந்து அந்த பெண்களுக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட தொந்தரவுகள் வருவதாக புகார் வந்தது.

எனவே இதை தடுக்கும் நோக்கில், மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானால், அவர்களுக்கு விசாரணை காலத்தில் 90 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலியல் குற்றத்தை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் பேரில் இந்த விடுப்பு வழங்கப்படும் என கூறியுள்ள அமைச்சகம், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுப்பு காலம் இதில் இருந்து கழிக்கப் படாது என்றும் அறிவித்து உள்ளது.

அந்தவகையில் மத்திய அரசு ஏற்கனவே வழங்கியுள்ள விடுப்பு காலத்துடன், இதுவும் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த 90 நாள் ஊதிய விடுப்புக்கு வழி செய்யும் வகையில் பணிச்சட்டம் திருத்தப்பட்டு உள்ளது. 

Similar News