தமிழ்நாடு

திரவ நைட்ரஜன் கலந்து பதப்படுத்தப்படும் உணவுகள்... 'நேரடியாக உட்கொண்டால் ஆபத்தாம்'

Published On 2024-04-27 07:23 GMT   |   Update On 2024-04-27 07:23 GMT
  • திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது.
  • 6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சென்னை:

அமிலம் கலந்து உணவுப் பொருட்கள் வினியோகம் என்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வாடிக்கையாளர்களை கவர ஐஸ்கிரீம், பிஸ்கெட் ஆகியவற்றின் மீது திரவ நைட்ரஜனை கலப்பது சாப்பிடும் போது புகையை வரவழைக்கும்.

இதனால் ஆர்வமுடன் அதை வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் இது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்மோக் பிஸ்கெட், ஸ்மோக் பீடா, ஸ்மோக் ஐஸ்கிரீம் விற்பனைக்கு சென்னையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு உட்கொள்ளும் தருணத்தில் திரவ நைட்ரஜனை அதன் மீது கலந்தால் வாயில் இருந்து புகை அதிக அளவில் வரும். இதை சுவாசிப்பதால் ஜீரண மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

இதுதொடர்பாக சென்னை உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பால், தயிர், க்ரீம்கள், விப்பிங் க்ரீம்கள், கொழுப்பு குறைவான க்ரீம்கள், பதப்படுத்தப்பட்ட பழங்கள், பழ ரசங்கள், காய்கறிச் சாறுகள், காபி, தேநீர், மூலிகை பானங்கள் உள்ளிட்டவற்றை நுரைக்கச் செய்வதற்கும், கெட்டுப்போகாமல் பொட்டலமிடுவதற்கும் திரவ நைட்ரஜனை பயன்படுத்தலாம்.

அதே போல, திராட்சை ஒயினில் இருந்து ஆக்ஸிஜனை வெளியேற்றுவதற்கும் அதை பயன்படுத்தலாம். மற்றபடி வேறு எந்த வகையிலும் வணிகர்கள் திரவ நைட்ரஜனை உணவில் சேர்க்கக் கூடாது.

இந்த விதியை மீறினால் ரூ.2 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். குற்றம் நிரூபணமானால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, திரவ நைட்ரஜன் கலந்த உணவுப் பொருளை உட்கொண்டு பாதிக்கப்பட்டவர் அல்லது அவரது குடும்பத்தினருக்கு சம்பந்தப்பட்ட வணிகரிடம் இருந்து இழப்பீடு பெற்றுத் தரப்படும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

திரவ நைட்ரஜன் உட்கொள்ளப்படும் போது உதடு, நாக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிற்று பகுதியை சேதப்படுத்துகிறது. நுரையீரலுக்குள் புகுந்தால் சுயநினைவும் இழக்க வாய்ப்பு உண்டு என்று எச்சரித்துள்ளார்கள்.

அதே நேரம் தொழில் துறை நோக்கங்களுக்காக திரவ நைட்ரஜன் பயன்பாட்டை அனுமதித்துள்ளார்கள். உணவுப் பொருட்களை உறைய வைக்க, குளிரூட்ட, பேக்கிங் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அந்த உணவு பொருட்கள் பல மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்குமாம்.

6 மாதங்களுக்கு முன்பே திருச்சியில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் ஸ்மோக்கிங் பிஸ்கெட் விற்றவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதே போல் சென்னையில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சியிலும் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இப்போதுதான் தடை வந்துள்ளது.

உணவில் கலந்து பதப்படுத்தி வைத்திருந்தால் அதை சாப்பிடும் போது உடலை பதம் பார்க்காதாம். இதமாக இருக்குமாம். ஆனால் சாப்பிடும் போது அதன் மீது தெளித்து சாப்பிட்டால்தான் ஆபத்தாம்.

Tags:    

Similar News