செய்திகள்

உத்தரகாண்ட் மாநில முதல்வராக பதவியேற்றார் திரிவேந்திர சிங் ராவத்

Published On 2017-03-18 09:45 GMT   |   Update On 2017-03-18 09:50 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்மந்திரியாக திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அமித் ஷா, முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் ஆகியோர் பங்கேற்றனர்.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளில், பா.ஜ.க. 57 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது. காங்கிரஸ் 11 இடங்களிலும், இதர கட்சிகள் 2 இடங்களை பெற்றது.

பா.ஜ.க. சார்பில் உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கான ஆளும்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரிவேந்திர சிங் ராவத் சட்டசபை கட்சித் தலைவராகவும், முதல் மந்திரியாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து, திரிவேந்திர சிங் ராவத் நேற்று ஆளுநர் கே.கே.பாலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். உரிமை கடிதத்தை பெற்ற ஆளுநர் பால், திரிவேந்திர சிங் ராவத்தை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தின் 8-வது முதல்-மந்திரியாக  திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் கே.கே.பால் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். ராவத் உடன் மற்ற அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.



தலைநகர் டேராடூனில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதமர் மோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டு புதிய முதல்மந்திரிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News