செய்திகள்

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கிக்குள் மக்களை அனுமதிக்காதது ஏன்? சுப்ரீம்கோர்ட்டு

Published On 2017-03-06 07:59 GMT   |   Update On 2017-03-06 07:59 GMT
வாக்குறுதி அளித்தபடி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கிக்குள் மக்களை அனுமதிக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி:

ரூ.500, ரூ.1000 நோட்டு களை செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந்தேதி மத்திய அரசு அறிவித்தது.

பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டது. டிசம்பர் இறுதியில் அந்த காலக்கெடு முடிந்தது.

மத்திய அரசு அளித்த கால அவகாசத்துக்குள் 93 சதவீத பழைய நோட்டுகள் வங்கிகளில் கொடுத்து மாற்றப்பட்டு விட்டன. சுமார் 7 சதவீதம் நோட்டுகள் இன்னமும் மக்களின் கைகளில் உள்ளது.


அவர்கள் மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் ரிசர்வ் வங்கியை அணுகி, தங்கள் வசம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து விட்டு, புதிய ரூபாய் நோட்டுகளை பெறலாம் என்று அறிவிக்கபபட்டது. ஆனால் மத்திய அரசு அறிவித்தபடி ரிசர்வ் வங்கிக்குள் சென்று எல்லாராலும் பணத்தை மாற்ற இயலவில்லை.

ரிசர்வ் வங்கியை அணுக இயலாத நிலை இருப்பதால் பழைய ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இதையடுத்து பலரும் சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற மார்ச் 31-ந்தேதி வரை மத்திய அரசு அவகாசம் கொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாக்குறுதிக்கு ஏற்ப பலரும் ரூபாய் நோட்டுகளை மாற்ற இயலவில்லை என்கிறார்கள்.


மார்ச் 31-ந்தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற ஏன் அனுமதிக்க கூடாது? இதுபற்றி மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 10-ந்தேதி நடைபெறும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Similar News