செய்திகள்

கென்சாஸ் துப்பாக்கிச்சூடு: இந்தியருக்கு உதவ முயன்ற அமெரிக்கருக்கு சுஷ்மா பாராட்டு

Published On 2017-03-04 19:49 GMT   |   Update On 2017-03-04 19:49 GMT
அமெரிக்காவில் இந்திய இளைஞர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்படும் போது தடுக்க முயற்சி செய்து காயமடைந்த அமெரிக்கருக்கு இந்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அமெரிக்காவின் கான்ஸாஸ் நகரில் கடந்த மாதம் 22-ஆம் தேதி இரவு உணவு விடுதியில் இருந்த 2 இந்தியர்களை ’நாட்டை விட்டு வெளியேறு' என்று கூறியபடியே அந்நாட்டு கடற்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆடம் புரின்டன் என்பவர் துப்பாக்கியால் சுட்டார். இதில், ஸ்ரீநிவாஸ் குச்சிபோட்லா (32) உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது நண்பர் அலோக், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.



உணவு விடுதிக்குள் நுழைந்து கண்மூடித்தனமாக அவர்கள் மீது ஆடம் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது, அதே உணவு விடுதியில் இருந்த மற்றோர் அமெரிக்கரான கிரில்லாட் என்பவர் இந்தியர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றார். அப்போது, அவரது கையில் குண்டு பாய்ந்து படுகாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மாவின் உத்தரவின் பேரில், அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உயரதிகாரி அனுபம் ராய், கிரில்லட்டையும் அவரது குடும்பத்தினரையும் நேற்று சந்தித்து ஆறுதலும், நன்றியும் தெரிவித்தார். அப்போது, கிரில்லட்டை பாராட்டி சுஷ்மா எழுதிய கடிதத்தையும் அவரிடம் அனுபம் ராய் ஒப்படைத்தார். மேலும், கிரில்லட்டையும், அவரது குடும்பத்தினரையும் இந்தியா வருமாறு அனுபம் அழைப்பு விடுத்தார்.

Similar News