செய்திகள்

‘தேங்காய் சாறு, உருளைக்கிழங்கு ஆலை’: ராகுல் பேச்சுக்கு மோடி கிண்டல்

Published On 2017-03-01 18:38 GMT   |   Update On 2017-03-01 18:38 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் மகராஜ்கஞ்ச் என்ற இடத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ராகுலை கிண்டல் அடித்து பேசினார்.
லக்னோ:

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “லண்டனில் ஒருவர் தேங்காய் சாறு குடிக்கிறார் என்றால், அதன்மீது இது மணிப்பூரில் உற்பத்தியானது என்று அச்சிட்டிருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

இதேபோன்று உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி, “உங்கள் பகுதியில் உருளைக்கிழங்கு ஆலை வேண்டும் என கேட்கிறீர்கள். நான் எதிர்க்கட்சி தலைவர். நான் அதைத் திறக்க முடியாது. அரசுக்கு வேண்டுமானால் உங்கள் கோரிக்கைக்கு அழுத்தம் தரலாம்” என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாக, உத்தரபிரதேச மாநிலத்தில் மகராஜ்கஞ்ச் என்ற இடத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, ராகுலை கிண்டல் அடித்தார்.

அப்போது அவர், “ஒரு காங்கிரஸ் தலைவர் இருக்கிறார். அவர் சமீபத்தில் மணிப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் அங்குள்ள விவசாயிகளிடம் தேங்காயில் இருந்து சாறு எடுத்து லண்டன் அனுப்புவேன் என்று சொல்லி இருக்கிறார். பாவம். தேங்காயில் தண்ணீர்தான் இருக்கும். சாறு இருக்காது. கேரளாவில்தான் தென்னை மரங்கள் அதிகம்” என்று கூறினார்.

மேலும், “இது உருளைக்கிழங்கு ஆலை அமைப்பதுபோலத்தான். இந்தளவுக்கு அவர் திறமை வாய்ந்த, தொலைநோக்கு சிந்தனை வாய்ந்தவர்” என்று குறிப்பிட்டார். 

Similar News