செய்திகள்

ரூ.4,234 கோடி மதிப்பிலான விஜய் மல்லையாவின் சொத்துகள் பறிமுதல்

Published On 2017-03-01 00:47 GMT   |   Update On 2017-03-01 00:47 GMT
விஜய் மல்லையாவின் ரூ.4,234 கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதி விசாரணை ஆணையம் அனுமதி அளித்துள்ளது
புதுடெல்லி:

தொழில் அதிபர் விஜய் மல்லையா, பொதுத்துறை வங்கிகளிடம் சுமார் ரூ.9 ஆயிரத்து 380 கோடி கடன் வாங்கி விட்டு வட்டியுடன் திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிவிட்டார்.

இந்த நிலையில், சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் தொடர்புடைய அவரது அடுக்குமாடி வீடுகள், பண்ணை வீடு, பங்குகள், நிலைத்த வைப்பு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்ய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இவற்றின் பத்திர மதிப்பு, ரூ.4 ஆயிரத்து 234 கோடி; சந்தை மதிப்பு ரூ.6 ஆயிரத்து 630 கோடி.

அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் உத்தரவுக்கு சட்ட விரோத பண பரிமாற்ற தடை நீதி விசாரணை ஆணையத்தின் உறுப்பினர் (சட்டம்) துஷார் வி. ஷா அனுமதி அளித்துள்ளார்.

எனவே விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யும் அடுத்த கட்ட நடவடிக்கையில் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் இறங்கும்.

பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்ட சொத்துகள் அனைத்தும், விஜய் மல்லையா வங்கிக்கடன்கள் பெற்று திருப்பிச்செலுத்தாமல் சேர்த்து வைத்த பணத்தை கொண்டு வாங்கிக்குவித்தது என அமலாக்கப்பிரிவு இயக்குனரக வட்டாரங்கள் கூறுகின்றன. 

Similar News