செய்திகள்
கோப்புப் படம்

பிரதமர் மோடியை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி: நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரிக்கை

Published On 2017-02-27 12:53 GMT   |   Update On 2017-02-27 12:59 GMT
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு மற்றும் மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்கக் கோரி பிரதமர் மோடியை இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
புதுடெல்லி:

தமிழக முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்திக்க நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இரவு 10.15 மணிக்கு அவர் டெல்லியை அடைந்தார்.

இந்நிலையில், இன்று மாலை பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, ‘மருத்துவ கல்விக்கான தேசிய நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தும் போராட்டம்’ ஆகிய பிரச்சனைகள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார்.



பிரதமருடனான சந்திப்பின் போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு செயலாளர்கள் சிவ்தாஸ் மீனா, விஜயகுமார், கூடுதல் செயலாளர்கள் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

பிரதமரின் சந்திப்பை தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக அமைச்சர்களும் மத்திய மந்திரிகள் நிதின் கட்காரி, வெங்கையா நாயுடு, ரவிசங்கர் பிரசாத், பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்கள்.

Similar News