செய்திகள்

பாலக்காடு அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள்

Published On 2017-02-27 11:14 GMT   |   Update On 2017-02-27 11:14 GMT
பாலக்காட்டில் நேற்று ஒரே நேரத்தில் 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலம்புழா வனப்பகுதியில் இருந்து நேற்று ஒற்றை காட்டுயானை ஊருக்குள் புகுந்தது. மலம்புழா, பொட்டைக்காடு, நள்ளேபுள்ளி ஆகிய பகுதிகளில் 13 கி.மீட்டர் சுற்றுளவுக்கு காட்டுயானை சுற்றித்திரிந்தது. இதைபொதுமக்கள் பார்த்து சத்தம் எழுப்பினர்.

இதில் ஆவேசமடைந்த யானை அங்கு கட்டியிருந்த பசுமாட்டை தந்தத்தால் குத்தியது. இதில் பசுமாடு ரத்தவெள்ளத்தில் மயங்கியது. பின்னர் சாரம்மாள் (47) என்ற பெண்ணை குத்தி தள்ளியது. அதன்பின்னர் ரமேஷ் (38) என்பவரின் தலையில் துதிக்கையால் ஓங்கி அடித்தது. இதில் ரமேசுக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் அங்குள்ள வனத்துறை அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியது. ஆவேசமாக சுற்றிய காட்டுயானையை பார்த்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.

இது குறித்து பாலக்காடு வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் ஒற்றை காட்டுயானை மலம்புழா வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதேபோன்று மற்றொரு காட்டுயானை கோங்காடு, கடம்பலிப்புரம் ஆகிய பகுதிகளுக்கு ரெயில் தண்டவாளத்தை கடந்து ஊருக்குள் புகுந்தது. அங்கியிருந்த சரஸ்வதி என்பவருக்கு சொந்தமான வீட்டை அடித்து நொறுக்கியது. பின்னர் செல்வி என்பவரது காம்பவுண்டு சுவற்றை இடித்து தள்ளியது. அதன்பின்னர் அங்கிருந்த குளத்தில் ஆனந்த குளியல் போட்டது. பின்னர் அசைந்தாடியபடி வனப்பகுதிக்குள் சென்றது.

காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர். காயம் அடைந்த பசுமாட்டுக்கு கல்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மீண்டும் ஊருக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று பாலக்காட்டில் ஒரே நேரத்தில் 2 காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News