செய்திகள்

காங்கிரஸ் ஆதரவுடன் மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது சிவசேனா?

Published On 2017-02-26 03:19 GMT   |   Update On 2017-02-26 03:19 GMT
பா.ஜனதாவை விலக்கி வைத்து விட்டு காங்கிரஸ் ஆதரவுடன் மும்பை மாநகராட்சியை சிவசேனா கைப்பற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை:

மும்பை மாநகராட்சியில் உள்ள 227 வார்டுகளில் நடந்து முடிந்த தேர்தலில் சிவசேனா 84 இடங்களையும், பா.ஜனதா 82 இடங்களையும் பிடித்து உள்ளன. இவ்விரு கட்சிகளுக்கிடையே மாநகராட்சியை கைப்பற்ற போவது யார்? என்ற பலப்பரீட்சை ஏற்பட்டு உள்ளது.

கூட்டணியை உடைத்து தேர்தலை சந்தித்த இரண்டு கட்சிகளும் தேர்தலுக்கு பின் கூட்டணி அமைக்கும் என்று கருதப்பட்டது. ஆனால் இரண்டு கட்சிகளும் மேயர் நாற்காலியை குறி வைப்பதால் கூட்டணி அமைவதில் சிக்கல் எழுந்து இருக்கிறது.

மாநகராட்சி தேர்தலுக்கு முன்னதாகவே மாநகராட்சியில் சிவசேனா ஊழல், முறைகேடுகளில் ஈடுபட்டதாக பா.ஜனதா தலைவர்கள் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். கூட்டணி உடைந்த பின்னர் பிரசாரத்தின் போது இரண்டு கட்சிகளும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து கொண்டனர்.

எனவே தேர்தலுக்கு பின் பா.ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என சிவசேனா மூத்த தலைவரான திவாகர் ராவ்தே திட்டவட்டமாக கூறினார்.

அதே நேரத்தில் தேர்தல் முடிவு வெளியாவதற்கு ஒரு நாளைக்கு முன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை சந்தித்த மாநில பா.ஜனதா தலைவர் ராவ் சாகேப் தன்வே, பா.ஜனதாவுடன் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிக்கு சிவசேனா முன் வர வேண்டும் என்று கூறியிருந்தார்.



இந்த பரபரப்பான சூழலில் பா.ஜனதாவை விலக்கி வைத்து விட்டு, மும்பை மாநகராட்சியை கைப்பற்றுவதற்கு காங்கிரசுடன் சிவசேனா கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மும்பை மாநகராட்சி அதிகாரத்தில் அமருவதற்கு 114 இடங்களை பெற்றிருக்க வேண்டும்.

இதில் சிவசேனாவின் பலம் சுயேட்சைகளின் ஆதரவுடன் சேர்த்து 88 ஆக அதிகரித்து இருக்கிறது. மாநகராட்சியில் காங்கிரசின் பலம் 31. எனவே காங்கிரஸ் சிவசேனாவுடன் கைகோர்க்கும் பட்சத்தில் சிவசேனா மாநகராட்சியை தனக்கு உரித்தாக்கி கொள்வது உறுதியாகி விடும்.

உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதாவின் எழுச்சி சிவசேனா, காங்கிரஸ் கட்சிகளுக்கு பின்னடைவு என கருதப்படும் நிலையில் அந்த கட்சிகளின் கூட்டணி மலர வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

மேலும் பா.ஜனதாவை பழிவாங்குவதற்கு சிவசேனா மாநில அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை திரும்ப பெறும் பட்சத்தில் பா.ஜனதா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் மாநில ஆட்சியை கைப்பற்ற சிவசேனா திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்னோட்டமாக மாநகராட்சியில் சிவசேனா- காங்கிரஸ் கூட்டணி மலர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், ஒரு போதும் சிவசேனாவுக்கு, காங்கிரஸ் ஆதரவு அளிக்காது என்று கூறினார்.

இந்த நிலையில், மும்பை மாநகராட்சியை கைப்பற்ற காங்கிரசுடன், சிவசேனா கூட்டணி அமைக்க மும்பை டப்பாவாலாக்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மும்பை டப்பாவாலாக்கள் சங்க பேச்சாளர் சுபாஷ் தலேக்கர் கூறியதாவது:-

‘டப்பாவாலாக்கள் என்றும் சிவசேனாவுக்கு ஆதரவு அளித்து வருகிறோம். சிவசேனாவுக்காக தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டோம். தற்போதைய சூழலில் எதிரி கட்சியாக கருதப்படும் காங்கிரசுடன் கூட சிவசேனா கூட்டணி அமைக்கலாம். ஆனால் பா.ஜனதாவுடன் சேரக் கூடாது. சிவசேனாவினரால் தான் தேவேந்திர பட்னாவிஸ் மாநிலத்தில் ஆட்சி அமைத்தார். ஆனால் மாநகராட்சி தேர்தல் பிரசாரத்தின் போது அவர் சிவசேனாவை கடுமையாக விமர்சித்து பேசினார். எனவே சிவசேனா மாநில அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவையும் திரும்ப பெற வேண்டும்.

பா.ஜனதாவுடன் கூட்டணியை தொடர்ந்தால், மாநிலத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி தான் சிவசேனாவுக்கும் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News