செய்திகள்

காஷ்மீர் குறித்த ப.சிதம்பரத்தின் கருத்து அதிர்ச்சி தருகிறது: வெங்கையா நாயுடு

Published On 2017-02-26 00:40 GMT   |   Update On 2017-02-26 00:40 GMT
காஷ்மீர் குறித்து ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து அதிர்ச்சி தருகிறது என்று வெங்கையா நாயுடு கடுமையாக தாக்கினார்.
புதுடெல்லி:

காஷ்மீர் குறித்து ப.சிதம்பரம் தெரிவித்த கருத்து அதிர்ச்சி தருகிறது என்று வெங்கையா நாயுடு கடுமையாக தாக்கினார்.

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று முன்தினம் ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, அவர் கூறுகையில், “காஷ்மீரில் வன்முறையை ஒடுக்குவதற்கு படைகளை மத்திய அரசு மூர்க்கத்தனமாக கையாண்ட விதம் நாம் கிட்டத்தட்ட காஷ்மீரை இழந்துவிட்டது போன்ற உணர்வை தருகிறது. அங்கு நிலைமையை மத்திய அரசு சரி செய்யாவிட்டால் இன்னும் மோசமாகி விடும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

அவருடைய இந்த கருத்துக்கு மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இதுபற்றி ஐதராபாத்தில், தெலுங்கானா மாநில பா.ஜனதா சார்பில் நடந்த மராட்டிய மற்றும் ஒடிசா மாநில உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வெங்கையா நாயுடு, ப.சிதம்பரத்தை கடுமையாக தாக்கினார்.

அவர் கூறியதாவது:-

ப.சிதம்பரத்தின் கருத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பொறுப்பற்றது. தேச விரோதமானது. அதிர்ச்சி தருவதாகவும் அமைந்து உள்ளது. அதுவும் மத்திய உள்துறை மந்திரியாக இருந்த ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வெளி வருவது வேதனையானது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை முழுமையாக அறிந்த ஒருவர் இதுபோல் பேசுவதும் அழகல்ல.

காஷ்மீரில் பயங்கரவாத செயல்களை தூண்டிவிட்டும், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவியும் செய்து வரும் பாகிஸ்தானின் காதுகளுக்கு ப.சிதம்பரத்தின் பேச்சு இனிய இசையாகத்தான் இருக்கும்.

காஷ்மீரில் அமைதியின்மைக்கும், காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக ஆக்குவதற்கு எல்லாவழிகளிலும் முயற்சித்து வரும் பாகிஸ்தானுக்கு ப.சிதம்பரத்தின் பேச்சு ஊக்கம் தருவதாகவும் அமைந்து இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

Similar News