செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் பலி

Published On 2017-02-23 05:23 GMT   |   Update On 2017-02-23 05:27 GMT
காஷ்மீர் மாநிலத்தில் இன்று அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் கைவரிசை காட்டினார்கள். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீண்டும் கைவரிசை காட்டினார்கள். இதையடுத்து காஷ்மீரில் இன்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

காஷ்மீரில் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்றிரவு பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியை முற்றுகையிட்டு தேடுதல் வேட்டை நடத்தினார்கள்.

நள்ளிரவு அவர்கள் சோதனையை முடித்துக் கொண்டு வாகனங்களில் திரும்பிக்கொண்டிருந்தனர். 2.30 மணியளவில் பாதுகாப்புப்படை வாகனங்கள் மத்ரிகம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது, அங்கு பதுங்கி இருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

ராணுவ வாகனங்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசியும், எந்திர துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

ராணுவ வாகனங்களில் அயர்ந்து தூங்கியபடி வந்த ராணுவ வீரர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சுதாரிப்பதற்குள் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடுவதை தீவிரப்படுத்தினார்கள். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.


இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 6 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் ராணுவ உயர்அதிகாரிகள் ஆவார்கள்.

தீவிரவாதிகள் சரமாரியாக சுட்டதில் அந்த பகுதியில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு பெண் மீதும் குண்டு பாய்ந்தது. அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். அவர் ஜனாபேசன் என்று தெரிய வந்துள்ளது.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைப் பிடிக்க சோபியான் மாவட்டம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அம்பா வட்டத்துக்கு கூடுதல் ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் கடந்த 10 நாட்களில் இன்று மூன்றாவது தடவையாக மிகப்பெரும் தாக்குதலை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News