செய்திகள்

போதைப்பொருள் விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2017-02-19 03:27 GMT   |   Update On 2017-02-19 03:27 GMT
பெங்களூருவில், போதைப்பொருள் விற்பனை செய்ததாக பெண் உள்பட நைஜீரியா நாட்டை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:

பெங்களூரு ராமமூர்த்தி நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மாரகொண்டனஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட முகவரியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது அங்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதையடுத்து வீட்டில் இருந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்களின் பெயர்கள் மக்கோ சவுகூகா (வயது 29), சவுக் உமிமேகா (31), விஸ்டம் அய்பய்வூ (28) கிப்ட் பெனிடிக்சி (26) என்பதும், அவர்கள் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், தொழில் விசாவில் இந்தியாவுக்கு வந்த 4 பேரும் பெங்களூருவில் தங்கி போதைப்பொருள் விற்பனை செய்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 44 கிராம் போதைப்பொருள் (கோகைன்), 10 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு மடிக்கணினி, ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 உள்பட ரூ.7½ லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.2,500 ரத்து செய்யப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

Similar News