செய்திகள்

கிரிமினலாக இருந்து அரசியல்வாதியாக மாறிய சகாபுதீன் திகார் சிறைக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-02-16 00:33 GMT   |   Update On 2017-02-16 00:33 GMT
பீகார் மாநிலத்தில் கிரிமினலாக இருந்து அரசியலுக்கு வந்த முகமது சகாபுதீன் ஒரு வார காலத்திற்குள் திகார் சிறைக்கு மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
புதுடெல்லி:

பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் தொகுதியில் இருந்து லாலு பிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளம் கட்சியின் சார்பில் 1996-2008 இடையே தொடர்ந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், முகமது சகாபுதீன் (வயது 49).

இவர் கிரிமினலாக இருந்து அரசியலுக்கு வந்தவர். 10 வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ள இவர், தற்போது அங்கு சிவான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரை டெல்லி திகார் சிறைக்கு மாற்றுமாறு கோரி தாக்கலான மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. முடிவில், அவரை ஒரு வார காலத்திற்குள் திகார் சிறைக்கு மாற்றுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அப்போது நீதிபதிகள், “இதுவரையில் சகாபுதீன் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 10 வழக்குகளில் தண்டிக்கப்பட்டுள்ளார். 45 வழக்குகளில் விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். இது வழக்கமானதல்ல, சாதாரணமானதல்ல என வழக்கு தொடர்பான தகவல்கள் காட்டுகின்றன. இவரை ஒரு வாரத்திற்குள் டெல்லி திகார் சிறைக்கு மாற்றி, அங்கு உரிய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். இதுபற்றி முன்கூட்டியே அந்த சிறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்” என கூறினர்.

அவ்வாறு சகாபுதீனை டெல்லி திகார் சிறைக்கு மாற்றுகிறபோது, விதிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படவேண்டும், சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படக்கூடாது என நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

Similar News