செய்திகள்

நீதிமன்றம் அவமதிப்பு வழக்கில் இன்று கர்ணன் ஆஜராகவில்லை: 3 வாரத்துக்கு வழக்கு ஒத்திவைப்பு

Published On 2017-02-13 11:20 GMT   |   Update On 2017-02-13 11:20 GMT
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு நீதிபதி கர்ணன் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த கர்ணன் கடந்த ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நீதிபதி கர்ணன் தாமாகவே முன் வந்து, அதை ஒரு வழக்காக எடுத்து விசாரித்தார். பிறகு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மீது நீதிபதி கர்ணன் குற்றச்சாட்டு வெளியிட்டார். இது தொடர்பாக அவர் பிரதமருக்கும், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கும் கடிதம் அனுப்பினார்.

இதனால் நீதிபதி கர்ணன் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் நடந்தது.

அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கர்ணன் 13-ந்தேதி ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதுவரை அவர் எந்த வழக்கையும் விசாரிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.

நீதிபதி கர்ணன் இதை ஏற்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் இன்று சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகவில்லை. அவர் சார்பில் வக்கீல் யாரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து நீதிபதி கர்ணன் மீதான கோர்ட்டு அவமதிப்பு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மூன்று வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இது பற்றி நீதிபதிகள் கூறுகையில், “கர்ணன் ஆஜராகாததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது” என்றனர்.

Similar News