செய்திகள்

கால்பந்து போன்று ஆகிவிட்டது என் நிலை; இரண்டு அணிகளும் உதைக்கின்றன - விஜய் மல்லையா

Published On 2017-02-03 06:05 GMT   |   Update On 2017-02-03 06:05 GMT
கடன் நெருக்கடியால் நாட்டை விட்டுச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, தனது நிலையானது இரு அணிகள் சுற்றி சுற்றி உதைக்கும் கால்பந்து போன்று ஆகிவிட்டதாக கூறியிருக்கிறார்.
புதுடெல்லி:

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில் வாங்கிய சுமார் ரூ.9000 கோடிக்கும் அதிகமான கடனை திருப்பிச் செலுத்த முடியாமல், நெருக்கடி அதிகரித்ததால் கடந்த ஆண்டு இந்தியாவை விட்டுச் சென்றார். அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்ததையடுத்து, அமலாக்கத்துறையானது பண மோசடி வழக்கு பதிவு செய்து, அவரது சொத்துக்களை முடக்கியுள்ளது. அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் இருந்தபடி தன் மீதான வழக்கு விவரங்களை கவனித்து வரும் விஜய் மல்லையா அவ்வப்போது தனது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

கடனை செலுத்தாமல் தப்பி ஓடுவோரை தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ள நிலையில், மல்லையா தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தான் கால்பந்து போன்றவன் என்றும், கடுமையான போட்டி கொண்ட இரண்டு அணிகள் சுற்றி சுற்றி உதைப்பதாகவும் கூறியுள்ளார்.

சி.பி.ஐ. விசாரணை மற்றும் அவரை பிரிட்டனில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லையா, ‘எனக்கு எதிராக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நான் ஒரு கால்பந்து. இரண்டு கடுமையான போட்டி கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் என்னை வைத்து விளையாடுகின்றன. துரதிர்ஷ்டவசமாக நடுவர்கள் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன் மீதான சி.பி.ஐ. குற்றச்சாட்டுகளை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறிய மல்லையா, வணிகம் மற்றும் பொருளாதாரத்தைப் பற்றி அவர்களுக்கு என்ன தெரியும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Similar News