செய்திகள்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

Published On 2017-01-30 09:19 GMT   |   Update On 2017-01-30 09:19 GMT
ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுடெல்லி:

ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு சார்பில் கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தின் முன் வடிவு கடந்த ஜனவரி 23-ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு நடைபெற்ற சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் இந்த சட்ட முன் வடிவு அனைத்து கட்சிகளுடன் சம்மதத்துடன் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. 

இதனையடுத்து ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த இந்த சட்டமானது ஆளுநர் மூலமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை தொடர்பான சிக்கல்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மத்திய அரசின் சம்மந்தப்பட்ட அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அலங்காநல்லூர், பாலமேட்டில் மட்டும் தற்காலிகமாக ஜல்லிக்கட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் பன்னீர் செல்வத்துடன் கலந்து பேசியபின் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News