செய்திகள்

சமாஜ்வாடியுடன் கூட்டணி வைப்பது காங்கிரசுக்கு எந்த பலனையும் தராது - மாயாவதி கணிப்பு

Published On 2017-01-21 10:31 GMT   |   Update On 2017-01-21 10:31 GMT
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைத்தேர்தலில் ஆளும் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைப்பது காங்கிரஸ் கட்சிக்கு எந்த பலனையும் தராது என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்தார்.
லக்னோ;

உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்பட 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தை பொறுத்தவரை ஆளும் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கிறது. முக்கிய எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, “உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியானது சமாஜ்வாடிக்கு தாழ்ந்து நடக்கிறது. அகிலேஷை முதலமைச்சர் வேட்பாளர்களாக ஏற்றுக் கொள்ள முடியாமலும், இரு கட்சிகளின் கூட்டணி பிடிக்காமலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வர தயாராக உள்ளனர்.

காங்கிரஸ் தங்களை மதச்சார்பற்றவர்களாக நினைத்துக் கொண்டிருந்தால், அவர்கள் சமாஜ்வாடியுடன் கூட்டணி சேரக்கூடாது. மாநிலத்தில் உள்ள குண்டர்களையும், சமூக விரோதிகளையும் சமாஜ்வாடி கட்சி பாதுகாத்துவருகிறது. பா.ஜ.க.வுக்கும் சமாஜ்வாதிக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறது.

சமாஜ்வாடியுடன் காங்கிரஸ் சேர்ந்திருப்பதால், காங்கிரசுக்கு எந்தப் பலனும் இருக்காது. காங்கிரசில் உள்ள தொண்டர்களே கடந்த ஐந்து ஆண்டுகள் நடந்த காட்டு தர்பாரில் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் கூட காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணிக்கு வாக்களிக்க மாட்டார்கள்” என காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சியை கடுமையாக சாடியுள்ளார்.

Similar News