செய்திகள்

அசாம்: அரசுப் பொறியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.

Published On 2017-01-21 08:08 GMT   |   Update On 2017-01-21 08:08 GMT
அசாம் மாநிலத்தில் அரசுப் பொறியாளரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த எம்.எல்.ஏ.வைப் பற்றிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவுகாத்தி:

அசாம் மாநிலம் நாகோன் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கடந்த வியாழன் அன்று பா.ஜ.க.வைச் சேர்ந்த ராஹா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ திம்பேஸ்வர் தாஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தனது காரை அலுவலகத்தின் வெளியே உள்ள பாதையின் நடுவே நிறுத்தி வைத்தார். 

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவிப் பொறியாளராக உள்ள ஜெயந்தா தாஸ், எம்.எல்.ஏ.வின் காரை அங்கிருந்து அகற்றி ஓரமாக நிறுத்தியுள்ளார்.

தனது காரை உதவிப் பொறியாளர் இடம் மாற்றி நிற்கவைத்த தகவல் அறிந்து கொதிப்படைந்த எம்.எல்.ஏ திம்பேஸ்வர் தாஸ், ஜெயந்தா தாஸை அலுவலகத்தின் உள்ளே வரவழைத்து, எனது காரை எப்படி நீ அகற்றலாம்? என தகராறு செய்ததுடன், தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்லி அவரை மிரட்டினார். 

எம்.எல்.ஏ.வின் மிரட்டலால் அதிர்ச்சியடைந்த உதவிப் பொறியாளர் ஜெயந்தா தாஸ் முதலில் தயங்கினாலும் வேறு வழியின்றி திம்பேஸ்வர் தாஸ் காலில் இரண்டு முறை விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

பொறியாளர் ஜெயந்தா தாஸ், எம்.எல்.ஏ.வின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட காட்சிகள் அந்த அலுவலகத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராவில் பதிவான இந்த காட்சிகள் தற்போது உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News