செய்திகள்

திருவனந்தபுரத்தில் மதுபாரை அகற்ற கோரி மறியலில் ஈடுபட்ட பெண்கள்

Published On 2017-01-18 10:25 GMT   |   Update On 2017-01-18 10:25 GMT
திருவனந்தபுரம் அருகே நட்சத்திர ஓட்டலில் செயல்படும் மதுபாரை அகற்ற கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் முதல்-மந்திரி உம்மன்சாண்டி மாநிலத்தில் மதுவிலக்கை கொண்டு வர முடிவு செய்தார். அதன்படி மது பார்களை படிப்படியாக மூடவும் அவர் நடவடிக்கை எடுத்தார்.

அதன்பிறகு கடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இதனால் மதுவிலக்கு கொள்கையில் தற்போது எந்த மாற்றமும் இல்லாத நிலை உள்ளது. இதனால் கேரளாவில் நட்சத்திர ஓட்டல்கள் உள்பட பல இடங்களில் மதுபார்கள் இயங்கி வருகிறது.

இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே காஞ்சிரங்குளம் என்ற இடத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் செயல்படும் மதுபாரை அகற்ற கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நட்சத்திர ஓட்டல் அமைந்துள்ள பகுதியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு பஸ் ஏற வரும் பெண் பயணிகளுக்கு மதுபோதையில் வருபவர்களால் தொல்லை ஏற்படுவதாகவும் இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளதால் அந்த மதுபாரை உடனே அகற்ற வேண்டும் என்றும் கோரி இந்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்திய பெண்களுடன் சமரச பேச்சு நடத்தினார்கள். அதை தொடர்ந்து சுமார் 3 மணி நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.

Similar News