செய்திகள்
கோப்பு படம்

டெல்லிக்குள் 7 தீவிரவாதிகள் ஊடுருவல்?: ராணுவ சீருடை வாங்கியதால் பரபரப்பு

Published On 2017-01-18 07:39 GMT   |   Update On 2017-01-18 07:39 GMT
டெல்லியில் உள்ள ஒரு கடையில் 7 பேர் ராணுவ சீருடை வாங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படை தளத்தில் கடந்தாண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

4 நாட்கள் நடந்த இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த நிலையில் விழாக் காலங்களில் ராணுவம், போலீஸ் உடைகளை ஒரு சிலர் அணிவது வழக்கம். ஆனால் சண்டிகாரில் ராணுவ உடைகள் அணிவதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

ராணுவ சீருடைகளை விற்பனை செய்ய விரும்பும் கடை உரிமையாளர்கள் அருகில் உள்ள ராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யலாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் டெய்லர் கடையிலும் யாரேனும் ராணுவ உடை தைப்பதற்கு வந்தால் அவர்களிடம் போட்டோ ஒட்டிய அடையாள அட்டையில் சுய கையொப்பம் வாங்கிய பின்னரே, ஆடை தைத்து கொடுக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஒரு கடையில் 7 பேர் ராணுவ சீருடை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் 7 பேரும் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

குடியரசு தினத்துக்கு இன்னும் 8 நாட்களே இருப்பதால் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களின் உடையை அணிந்து டெல்லி உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

எனவே டெல்லி விமான நிலையம், மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் முக்கியமான இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணி மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லி விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். பயணிகளின் உடமைகளும் தீவிரமாக பரிசோதிக்கப்படுகிறது.

Similar News