செய்திகள்

அகிலேஷ் யாதவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு: தேர்தல் ஆணையம் உத்தரவு

Published On 2017-01-16 13:47 GMT   |   Update On 2017-01-17 06:48 GMT
சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னம் அகிலேஷ் யாதவுக்கு தான் சொந்தம் என மாநில தேர்தல் கமிஷன் தீர்ப்பு அளித்துள்ளது.
லக்னோ:

சமாஜ்வாதி கட்சியில் முலாயம்சிங் யாதவுக்கும், அவரது மகனும் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னம் கேட்டு இருவரும் தேர்தல் கமிஷனில் முறையிட்டனர். எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கையெழுத்து உள்ளிட்ட ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர்.

அந்த ஆதாரங்களை பரிசீலித்த தேர்தல் கமி‌ஷன், இருதரப்பினரிடம் தனது விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் அகிலேஷ் யாதவின் அணியில் இருப்பதால் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை அகிலேஷ் யாதவ் அணிக்கு ஒதுக்க தேர்தல் கமிஷன் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், அகிலேஷ் யாதவை அக்கட்சியின் தேசிய தலைவராகவும் மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. 

இந்த உத்தரவு அகிலேஷ் தரப்பினருக்கு அளவில்லா மகிழ்ச்சியையும், முலாயம் தரப்பினருக்கு பெருத்த அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால், முலாயம் சிங் யாதவ் அடுத்த கட்டமாக என்ன செய்வது என தமது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் தனது மகனான அகிலேஷ் யாதவுடன் மோத தயார் என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று பகிரங்கமாக அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News