செய்திகள்

அகிலேஷ் யாதவுடன் மோத தயார்: முலாயம் சிங் யாதவ் பகிரங்க அறிவிப்பு

Published On 2017-01-16 09:52 GMT   |   Update On 2017-01-16 12:17 GMT
உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபை தேர்தலில் தனது மகனான அகிலேஷ் யாதவுடன் மோத தயார் என சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
லக்னோ:

403 தொகுதிகள் கொண்ட நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அகிலேஷ் யாதவ் முதல்-மந்திரியாக இருக்கிறார். அங்கு சட்டசபை தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 11-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதிவரை 7 கட்டமாக நடைபெறுகிறது.

இதற்கு முன் 2012 சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தது. தற்போது சமாஜ்வாடி கட்சியில் முலாயம்சிங் யாதவுக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, கட்சியின் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு? என்பது தொடர்பான விசாரணையில் இன்று மாநில கமிஷன் தீரிப்பளிக்க உள்ளது.

இந்நிலையில், லக்னோ நகரில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைமை அலுவலத்தில் இன்று தனது ஆதரவாளர்களிடையே முலாயம் சிங் யாதப் மனமுடைந்து பேசினார்.

ராம் கோபால் யாதவின் தாளத்துக்கு எல்லாம் தனது மகன் அகிலேஷ் யாதவ் கூத்தாடி வருவதாக அவர் குற்றம்சாட்டினார். தன்னை சந்திக்க வருமாறு மூன்று முறை அழைப்பு விடுத்தும், வீட்டுக்கு வந்த அகிலேஷ் யாதவ் ஒரே ஒரு நிமிடம் காத்திருந்துவிட்டு, வெளியேறி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சைக்கிள் சின்னம் யாருக்கு என்பது தொடர்பாக தேர்தல் கமிஷன் என்ன தீர்ப்பு அளித்தாலும், என்னையும் தேர்தல் கமிஷன் அளிக்கும் சின்னத்தையும் நீங்கள் ஆதரிக்க வேண்டும் என தனது ஆதரவாளர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

கட்சியையும், சைக்கிள் சின்னத்தையும் காப்பாற்ற என்னால் இயன்றதை எல்லாம் செய்து விட்டேன். ஆனால், எனது பேச்சுக்கு மதிப்பளிக்க அவர் (அகிலேஷ்) தவறிவிட்டால் அவருடன் மோதுவதை தவிர வேறு வழியில்லை எனவும் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.

Similar News