செய்திகள்

முஸ்லிம்களால் மக்கள்தொகை பெருக்கம்: பா.ஜ.க. எம்.பி.யின் கருத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

Published On 2017-01-07 08:00 GMT   |   Update On 2017-01-07 08:00 GMT
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பா.ஜ.க. எம்.பி. நாட்டில் மக்கள்தொகை பெருகுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று தெரிவித்த கருத்து தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 11-ம் தேதியில் இருந்து தொடங்கி ஏழுகட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தேர்வு, வேட்பு மனு தாக்கல் மற்றும் காரசாரமான தேர்தல் பிரசாரம் என அனைத்து கட்சிகளும் மும்முரமாக களமிறங்கியுள்ளன.

இந்நிலையில், முதல்கட்ட தேர்தலை விரைவில் சந்திக்கவுள்ள மீரட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பா.ஜ.க. எம்.பி., சாக்‌ஷி மஹராஜ் என்பவர், நாட்டில் மக்கள்தொகை பெருகுவதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று குற்றம்சாட்டி பேசியிருந்தார்.

நாட்டில் பெருகிவரும் மக்கள்தொகைக்கு இந்துக்கள் காரணமல்ல, 4 மனைவிகளின் மூலம் 40 பிள்ளைகள் வரை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ள மதத்தை சேர்ந்தவர்கள்தான் காரணம். மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என அவர் தனது பேச்சுக்கு இடையில் குறிப்பிட்டார்.

அவரது பேச்சுக்கு உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவரும் சட்டசபை உறுப்பினருமான அகிலேஷ் பிரதாப் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பணஒழிப்பு நடவடிக்கையில் இருந்து மக்களை திசைதிருப்ப இதைப்போன்ற கருத்துகளை வெளியிடும் சாக்‌ஷி மஹராஜ் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவரது எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என அவர் குரல் எழுப்பியுள்ளார்.

மதம், சாதி, வகுப்புவாதம் போன்றவற்றை மையப்படுத்தி, தேர்தல்களை அணுக கூடாது. எந்தப் பிரிவினரையும் இலக்காக்கி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட கூடாது என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில் சாக்‌ஷி மஹராஜின் கருத்து அரசியல் வட்டாரங்களை கடந்தும் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள தேர்தல் கமிஷன், மீரட் நகரில் சாக்‌ஷி மஹராஜ் பேசிய கருத்துகள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மீரட் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

Similar News