செய்திகள்

சூனியக்காரி என்ற சந்தேகத்தில் பெண்ணை எரித்துக்கொன்ற கொடுமை

Published On 2016-12-09 14:37 GMT   |   Update On 2016-12-09 14:37 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சூனியக்காரி என்ற சந்தேகத்தில் வயதான பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற கொடுமை நடந்துள்ளது.
குந்தி(ஜார்க்கண்ட்):

ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம் அனந்த்பூர் கிராமத்தைச் சேர்ந்த அனிதா சாய் என்ற பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்துவிட்டன. பக்கத்து வீட்டில் வசிக்கும் வயதான பெண்மணி சூனியம் வைத்ததால் குழந்தைகள் இறந்துவிட்டதாக நினைத்து, அவரை அனிதா சாய் உயிரோடு எரித்துக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அஷ்வினி குமார் சின்கா கூறியதாவது:-

அனிதா சாய்க்கு கடந்த நவம்பர் 15-ம்தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அவற்றில் ஒரு குழந்தை டிசம்பர் 3-ம்தேதி இறந்துள்ளது. மற்றொரு குழந்தைக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சுசாரி பூரு (62) என்ற பெண்ணிடம் சென்று தனது குழந்தையை குணப்படுத்தும்படி கேட்டுள்ளார். அவர் குழந்தை குணமாக வேண்டி பூஜை செய்ததாக தெரிகிறது. ஆனால், குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமல் நேற்று இறந்துவிட்டது.

ஆனால், சுசாரி சூனியம் வைத்ததால் தனது குழந்தைகள் இறந்திருக்கலாம் என சந்தேகமடைந்த அனிதா, நேற்று சுசாரி மீது மண் எண்ணெய் ஊற்றி உயிரோடு கொளுத்தியிருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த அந்தப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். அனிதா கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் மனநிலை பாதித்த இளம்பெண்ணை குணப்படுத்துவதாக கூறி கடுமையாக தாக்கி காயப்படுத்திய பில்லி சூனிய மருத்துவர் ஒருவரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News