செய்திகள்

ஊழலுக்கு எதிராக போராட மொபைல் ஆப்களை அறிமுகம் செய்த கேரளா

Published On 2016-12-09 11:34 GMT   |   Update On 2016-12-09 11:34 GMT
மக்கள் ஊழலுக்கு எதிராக போராடும் வகையில் இரண்டு மொபைல் ஆப்களை கேரள அரசு இன்று அறிமுகம் செய்துள்ளது.
திருவனந்தபுரம்:

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஊழலுக்கு எதிரான 2 மொபைல் ஆப்களை இன்று அறிமுகம் செய்துள்ளார்.

அரைசிங்கேரளா (Arising Kerala), விசில்நவ் (Whistle Now) என்ற இரண்டு மொபைல் ஆப்களையும் அறிமுகம் செய்து வைத்த பினராயி விஜயன் இதுகுறித்து கூறுகையில், "ஊழலற்ற மற்றும் நிலையான வளர்ச்சி என்பதே மாநில அரசின் நோக்கம். ஊழலை ஒழிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு, அரசு சாரா நிறுவனங்களில் ஊழலை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

இந்த 2 ஆப்களையும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பொதுமக்கள் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்த விஜயன், மக்கள் தங்கள் கருத்துகளையும் இந்த ஆப்கள் வழியாக தெரிவிக்கலாம் என்றார். மேலும் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் ஊழல் தடுப்பு அதிகாரிகள் அதுகுறித்து விசாரணை செய்வார்கள் என்றும் பினராயி விஜயன் உறுதியளித்துள்ளார்.

ஊழல் தொடர்பான தகவல்களை வெளியிடுபவர்கள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்பவர்களுக்கு வருடம் தோறும் விசில்ப்ளோவர் (தகவல் கூறுனர்) விருது வழங்கப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது.

Similar News