செய்திகள்

தமிழக, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை: 5-ந் தேதி இருநாட்டு மந்திரிகள் சந்திப்பில் இறுதி முடிவு?

Published On 2016-11-03 00:08 GMT   |   Update On 2016-11-03 00:08 GMT
மத்திய அரசு முன்னிலையில் தமிழக, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் நடந்தது. 5-ந் தேதி இரு நாட்டு துறை மந்திரிகள் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:

மத்திய அரசு முன்னிலையில் தமிழக, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் நடந்தது. 5-ந் தேதி இரு நாட்டு துறை மந்திரிகள் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும்போது இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வுகாண ஏற்கனவே இருதரப்பிலும் பேச்சுவார்த்தைகள் நடந்தன. மத்திய அரசு மற்றும் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள், தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையே டெல்லியில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அமைந்துள்ள ஜவகர்பவன் வளாகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு அமைச்சகத்தின் இணைசெயலாளர் ரேணுபால் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மத்திய மீன்வளத்துறை இணைசெயலாளர் ஆதித்யஜோஷி, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழக கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மீன்வளத் துறை ஆணையாளர் டாக்டர் பீலா ராஜேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.

தமிழக மீனவர் சங்க அமைப்புகளின் தரப்பில் தேவதாஸ், அருணாச்சலம் தலைமையிலான ராமநாதபுரம் மீனவ அமைப்பு பிரதிநிதிகள், ராமகிருஷ்ணன் தலைமையில் நாகப்பட்டினம் மீனவர் அமைப்பு பிரதிநிதிகள், ராஜமாணிக்கம் தலைமையிலான தஞ்சாவூர் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் வீரமுத்து, ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் புதுக்கோட்டை, திருநெல்வேலி மாவட்ட மீனவ பிரதிநிதிகள், புதுச்சேரி மீனவர்கள் அமைப்பு மற்றும் தேசிய மீனவர் அமைப்புகளின் பேரவை தலைவர் எம்.இளங்கோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் தொடர் முயற்சியின் காரணமாக 3 முறை பேச்சுவார்த்தை ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன. தற்போது 4-ம் கட்டமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் சுமுகமான முறையில் நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் பாக் ஜலசந்தி மீன்பிடிப்பு பகுதியில் இருதரப்பு மீனவர்களும் அமைதியான முறையில் மீன்பிடிக்க வேண்டும். அப்படி மீன்பிடிக்கும்போது எந்த வகையான இடையூறும் இலங்கை அரசாலோ அல்லது அந்நாட்டு மீனவர்களாலோ தமிழக மீனவர்களுக்கு ஏற்படக்கூடாது.

காற்றின் வேகத்தினால் உந்தப்பட்டு தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை பகுதிக்கு தவறுதலாக செல்லும்போது அந்த மீனவர்களை பிடித்து கைது செய்வது, படகுகளை கைப்பற்றுவது, படகுகளையும், வலைகளையும் சேதப்படுத்துவது, மீனவர்களை சுடுவது போன்ற காரியங்களை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது. தொழில்நுட்பம் மற்றும் தகவல் பரிமாற்றம் இரு தரப்பு மீனவர்களுக்கு இடையில் நடைபெற வேண்டும். இயற்கை இடர்பாடு போன்ற சூழ்நிலைகளிலும் இந்த பரிமாற்றங்கள் தொடர வேண்டும் என்று எடுத்துரைக்கப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கச்சத்தீவை மீட்பது குறித்து தமிழக முதல்வரே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கை தாக்கல் செய்திருக்கிறார். அந்த வழக்குக்கு குந்தகம் ஏற்படாத வகையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அதன் மீது தமிழக அரசின் ஒப்புதல் பெறவேண்டும் என்பது மிகவும் முக்கியமானது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அனைத்தும் 5-ந் தேதி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி, மீனவளத்துறை மந்திரி, இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி, மீன்வளத்துறை மந்திரி ஆகியோர் இடையில் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். நீண்ட நாட்களாக தொடரும் இந்த பிரச்சினைக்கு முடிவு காணவேண்டும் என்பதில் தமிழக அரசு பெரும் முனைப்புடன் உள்ளது.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயகுமார் கூறினார்.

Similar News