செய்திகள்

முலாயம்சிங் தம்பியால் என் உயிருக்கு ஆபத்து- அமர்சிங் எம்.பி.

Published On 2016-10-28 05:21 GMT   |   Update On 2016-10-28 05:36 GMT
முலாயம்சிங் தம்பியால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அமர்சிங் எம்.பி. கூறியிருக்கிறார். இதை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்

புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியில் பெரும் மோதல் நடந்து வருகிறது.

முதல்-மந்திரி அகிலேஷ் யாதவுக்கும், அவரது தந்தையும் கட்சி தலைவருமான முலாயம்சிங் யாதவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும் முலாயம்சிங்கின் தம்பிகளில் ஒருவர் அகிலேஷ் யாதவுக்கும், மற்றொருவர் முலாயம்சிங் யாதவுக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள்.

சமாஜ்வாடி கட்சியில் ஏற்பட்டுள்ள மோதலுக்கு கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான அமர்சிங்தான் காரணம் என குற்றம் சாட்டப்படுகிறது.

முலாயம்சிங்கின் தம்பி சிவபால் யாதவை, அகிலேஷ் யாதவுக்கு எதிராக தூண்டி விட்டு இருப்பதாக அமர்சிங் மீது புகார் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அமர்சிங்கிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

சமாஜ்வாடி கட்சியில் நடக்கும் பிரச்சினைக்கு நான் நிச்சயம் காரணம் இல்லை. என் மீது தவறான குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்.

அகிலேஷ் யாதவ், டிம்பிளை திருமணம் செய்தபோது இந்த திருமணத்துக்கு முலாயம்சிங்கின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் ஒருவன் மட்டுமே அகிலேசுக்கு ஆதரவாக இருந்தேன். அந்த திருமணம் நல்லபடியாக முடிந்தது. ஆனால், இன்று அகிலேஷ் என்னை எதிரியாக பார்க்கிறார்.

என்னை பொறுத்த வரை முதல்-மந்திரி அகிலேசுடன் நான் இல்லாமல் இருக்கலாம். ஆனால், முலாயம்சிங்கின் மகன் அகிலேசுடன் எப்போதும் நான் இருப்பேன்.

அகிலேசின் ஆதரவாளரான ராம்கோபால் யாதவ் (முலாயம்சிங்கின் தம்பி) எனக்கு மிரட்டல் விடுத்து இருக்கிறார். இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. எனக்கு 2 இளம் வயது மகள்கள் உள்ளனர். அவர்கள் பாதுகாப்பு எனக்கு முக்கியம். எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பாதுகாப்பு கேட்க இருக்கிறேன்.

ஒருவேளை என் உயிர் போனால்தான் சமாஜ்வாடி கட்சியில் பிரச்சினை தீரும் என்று கருதினால் அதற்காக எனது உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News