செய்திகள்

மணிப்பூர் முதல் மந்திரி மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு - மயிரிழையில் உயிர் தப்பினார்

Published On 2016-10-24 08:43 GMT   |   Update On 2016-10-24 09:14 GMT
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மணிப்பூர் மாநில முதல் மந்திரி ஒக்ரம் இபோபி சிங் மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்பால்:

மணிப்பூர் மாநிலம், உக்ருல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக அம்மாநில முதல் மந்திரி ஒக்ரம் இபோபி சிங் மற்றும் துணை மந்திரி கைக்காங்கம் ஆகியோர் தலைநகர் இம்பாலில் இருந்து ஹெலிகாப்டரில் இன்று காலை புறப்பட்டு வந்தனர்.

காலை 10.30 மணியளவில் உக்ருல் நகரில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அப்போது, அடையாளம் தெரியாத சில மர்மநபர்கள் முதல் மந்திரி இபோபி சிங்கை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அவரது பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணிப்பூர் ரைபிள்ஸ் படையை சேர்ந்த இரு வீரர்கள் படுகாயமடைந்தனர்.

தங்குல் நாகர்கள் இனத்தவர்களுக்கான சமஉரிமைக்காக போராடிவரும் நாகலாந்து தேசிய சோசலிஸ்ட் என்ற தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில், உக்ருல் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்துசெய்த முதல் மந்திரி இபோபி சிங் மற்றும் அவருடன் வந்தவர்கள் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் இம்பால் நகருக்கு திரும்பினர்.

அவர் புறப்பட்டு சென்றபிறகு அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்திய போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர் இரு போலீஸ் வாகனங்களை தீயிட்டு எரித்தனர்.

முன்னதாக, உக்ருல் மாவட்டத்துக்கு முதல் மந்திரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்குள்ள சில அமைப்புகளை சேர்ந்த பலர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News