செய்திகள்

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது

Published On 2016-10-22 00:28 GMT   |   Update On 2016-10-22 00:28 GMT
தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக தெலுங்கு டைரக்டர் மதுரா ஸ்ரீதர் ரெட்டி அறிவித்து உள்ளார்.
ஐதராபாத்:

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக தெலுங்கு டைரக்டர் மதுரா ஸ்ரீதர் ரெட்டி அறிவித்து உள்ளார்.

பிரபலமானவர்களின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்ட்டி பிக்சர்’ படமும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையை மையமாக வைத்து ‘மேரிகோம்’ படமும் வெளிவந்து வசூல் சாதனை நிகழ்த்தின.

கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை வரவாற்றை ‘எம்.எஸ்.டோனி’ என்ற பெயரில் படமாக எடுத்து வெளியிட்டனர். இந்த படமும் வெற்றிகரமாக ஓடியது. அடுத்து நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கையை படமாக எடுக்க ஏற்பாடுகள் நடக்கிறது. இந்த நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக தெலுங்கு டைரக்டர் மதுரா ஸ்ரீதர் ரெட்டி அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

“தெலுங்கானா தனி மாநிலத்துக்காக போராடி வெற்றி கண்டவர், சந்திரசேகரராவ். அவரது வாழ்க்கையில் வியப்பான பல விஷயங்கள் இருக்கின்றன. மகாத்மாகாந்தி, மார்ட்டின் லூதர்கிங், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பல தலைவர்களின் வாழ்க்கையைப் போல் சந்திரசேகரராவ் வாழ்க்கையும் போராட்டம் நிறைந்தது. எதிர்கால சந்ததியினர் அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

எனவேதான் அவரது வாழ்க்கையை படமாக எடுக்க இருக்கிறேன். அடுத்த வருடம் இதன் படப்பிடிப்பு தொடங்கும். சந்திரசேகரராவ் போராட்டம் பற்றி என்.டி.ராமராவ், சந்திரபாபு நாயுடு, சோனியா காந்தி, சிரஞ்சீவி, வெங்கையா நாயுடு, அத்வானி உள்ளிட்டோர் என்ன கருத்து கொண்டு இருந்தார்கள் என்பதும் படத்தில் காட்சிப்படுத்தப்படும். நடிகர்-நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.”

இவ்வாறு டைரக்டர் மதுரா ஸ்ரீதர் ரெட்டி கூறினார். 

Similar News