செய்திகள்

கேரளாவில் கள்ளத்தனமாக ஒருநம்பர் லாட்டரி விற்பனை: போலீஸ் ஐ.ஜி. தலைமையில் விசாரணைக்கு உத்தரவு

Published On 2016-10-21 09:21 GMT   |   Update On 2016-10-21 09:20 GMT
கேரள மாநிலத்தில் கள்ளத்தனமாக நடைபெற்றுவரும் ஒருநம்பர் லாட்டரி விற்பனை தொடர்பாக போலீஸ் ஐ.ஜி. தலைமையில் விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கள்ளத்தனமாக நடைபெற்றுவரும் ஒருநம்பர் லாட்டரி விற்பனை தொடர்பாக விவாதிப்பதற்காக கேரள மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்த தீர்மானத்தை கொண்டுவந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. சத்தீஸ்வரன், சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசின் நடவடிக்கையால் மாநிலத்தைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட சில ‘லாட்டரி மாபியாக்கள்’ தற்போது மீண்டும் இங்கு ஆதிக்கம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

இணையதளம் மற்றும் எஸ்.எம்.எஸ். மூலமாக மாநிலத்தின் வடமாவட்டங்களில் தற்போது ஒருநம்பர் லாட்டரி வியாபாரம் அமோகமாக கொடிகட்டி பறப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டசபை எதிர்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதாலா, ‘சட்டபுறம்பான இந்த ஒருநம்பர் லாட்டரி வியாபாரத்தில் லாட்டரி தொழிலில் பிரபல புள்ளியாக விளங்கிவரும் சான்டியோகோ மார்ட்டின் என்பவரின் பினாமிகள் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மாநில நிதித்துறை மந்திரி டி.எம்.தாமஸ், ‘சூதாட்டத்துக்கு நிகரான இந்த ஒருநம்பர் லாட்டரி ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதி பூண்டுள்ளது. இதுதொடர்பாக, எதிர்கட்சி தெரிவிக்கும் எந்த கருத்தையும் ஏற்றுக்கொள்ள திறந்த மனதுடன் காத்திருக்கிறோம்.

இதுதொடர்பாக, போலீஸ் ஐ.ஜி. பல்ராம் குமார் உபாத்யாயா தலைமையில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இந்த விசாரணை அறிக்கையின்பேரில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Similar News