செய்திகள்

கட்சி மாறிய 16 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க வேண்டும்: ஒய்.எஸ்.ஆர்.காங். வழக்கு

Published On 2016-10-20 07:23 GMT   |   Update On 2016-10-20 07:23 GMT
தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவிய 16 எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது.
நகரி:

2014-ம் ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆட்சியில் அமர்ந்த தெலுங்கு தேசம் கட்சியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் 16 எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராய் இணைந்தனர். எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் குற்றம் சாட்டியது. கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் மனு கொடுத்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பலமுறை மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஸ்வரேஷ்வர் ரெட்டி ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சின்னமான மின்விசிறியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 16 பேர் தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவி உள்ளனர்.

எனவே கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்களது எம்.எல்.ஏ. பதவிகளை பறிக்க சபாநாயகரிடம் மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கட்சி தாவிய எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார்.

Similar News