செய்திகள்

ரூ. 65,250 கோடி கருப்பு பணம் ஒப்படைப்பு: அருண் ஜெட்லி அறிவிப்பு

Published On 2016-10-01 13:28 GMT   |   Update On 2016-10-01 13:28 GMT
கருப்புப் பணம் ஒப்படைப்பு திட்டத்தின் மூலம் 64275 பேர் 65 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை ஒப்படைத்துள்ளதாக அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
புதுடெல்லி:

உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்பதற்காக ‘கருப்பு பணம் ஒப்படைப்பு’ திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இத்திட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்பட்ட கருப்புப் பணம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடைசி நேரத்தில் அதிக அளவில் கருப்புப் பணம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று வரை ரூ. 65,250 கோடி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஒரே நாளில் 16 ஆயிரம் கோடி ரூபாய் கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது. ஐ.டி.எஸ். என்பது கருப்புப் பணத்தை தடுப்பதற்கான திட்டம் அல்ல. பதுக்கப்பட்ட பணத்தை மீட்பதற்கான திட்டம்.

சராசரியாக ஒரு நபரால் ரூ.1 கோடி கறுப்புப் பணம் வெளியிடப்பட்டுள்ளது. பதுக்கி வைக்கப்பட்ட கருப்பு பணம் மற்றும் வரி ஏய்ப்புக்களை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் பலர் வரி ஏய்ப்பு செய்து வருகிறார்கள். வரி ஏய்ப்பு செய்து பதுக்கப்பட்ட பணத்தை ஒப்படைத்தவர்கள் பற்றிய எந்த தகவலையும் வெளியிடமாட்டோம்.

நாங்கள் கணக்கிட்டதை விட அதிகமான தொகையே ஒப்படைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கையால் வருமான வரித்துறையில் வருவாய் அதிகரித்துள்ளது. இதுவரை 64,275 பேர் கருப்பு பணம் தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

Similar News