செய்திகள்

தமிழகத்திற்கு மூன்று நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும்: கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Published On 2016-09-27 10:27 GMT   |   Update On 2016-09-30 06:47 GMT
தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

தமிழகத்துக்கு காவிரியில் செப்டம்பர் 21-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை. நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த கர்நாடகா அரசு, சிறப்பு சட்டசபையை கூட்டி, கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீர் தேவைக்கு மட்டுமே இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றியது. அத்துடன், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுவையும் தாக்கல் செய்தது. அதேபோல் தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசின் தீர்மானங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை கட்டுப்படுத்தாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் நீதிபதிகள் கூறியதாவது:-  

தமிழகத்திற்கு இன்று முதல் 3 நாட்களுக்கு 6 ஆயிரம் கன அடி காவிரி நீர் திறந்து விட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை என்றால் அது நீதிமன்ற மாண்பை பாதிக்கும்.

கர்நாடகத்தில் உள்ள சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய, மாநில அரசுகள் கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற வேண்டும்.

உயர் அதிகாரிகள் தலைமையில் மேலாண்மை வாரியம் குறித்து ஆலோசிக்க வேண்டும். இரு மாநில உயர் அதிகாரிகள் தலைமையில் விரிவாக விசாரணை நடத்த வேண்டும்.  

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் 3 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து வழக்கு விசாரணை வருகின்ற செப்.30-ம் தேதிக்கு (வெள்ளிக்கிழமை) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Similar News