செய்திகள்

காவிரி நீர் பங்கீடு பிரச்சினை: கர்நாடகாவின் திருத்தம் கோரும் மனுவை ஏற்கக்கூடாது - சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்

Published On 2016-09-27 00:11 GMT   |   Update On 2016-09-30 06:46 GMT
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவின் மீது கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவை விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
புதுடெல்லி:

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவின் மீது கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தம் கோரும் மனுவை விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு தமிழகத்துக்கு காவிரியில் 21-ந் தேதியில் இருந்து 27-ந் தேதி வரை வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவில் திருத்தம் கோரி கர்நாடக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேட்டூர் அணையில் தேவையான அளவு தண்ணீர் தேக்கிவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று கூறப் படுகிறது. இதனால் மேட்டூருக்கு மேலும் 42 டி.எம்.சி. தண்ணீர் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது. அக்டோபரில் இருந்து ஜனவரி வரை தமிழகத்துக்கு 63 டி.எம்.சி. போதுமானதாக இருக்கும். எப்படி இருந்தாலும் குறைந்தது 90 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்கும். இதனைக் கொண்டு தமிழ்நாடு சம்பா சாகுபடியை நடத்திக்கொள்ளலாம்.

தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டபடி வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறந்துவிடுவது கர்நாடகாவுக்கு மிகவும் கடினமானது. எனவே, இந்த உத்தரவை 2017 ஜனவரி 31-ந் தேதிக்கு பிறகு நடைமுறைப்படுத்தும் வகையில் திருத்தி வெளியிட வேண்டும்.

இவ்வாறு கர்நாடக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அரசு ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த உத்தரவை மதித்து நடக்கவில்லை. இதனால் தமிழக அரசு நீதிமன்றத்தை அடிக்கடி நாட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவையும் கர்நாடக அரசு மதித்து நடப்பது இல்லை.

கடந்த 5, 12 மற்றும் 20-ந் தேதிகளில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு எதையும் கர்நாடகா நடைமுறைப்படுத்தவில்லை. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 5, 12, மற்றும் 20-ந் தேதிகளில் பிறப்பித்த உத்தரவை கர்நாடகா நிறைவேற்றும் வரையில் எந்த திருத்தம் கோரும் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது.

இவ்வாறு தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால மனுவுடன் இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

Similar News