செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஸ்மார்ட்போனில் தீ விபத்து - கம்பெனி நிர்வாகிகள் நேரில் ஆஜராக சம்மன்

Published On 2016-09-24 01:51 GMT   |   Update On 2016-09-24 01:51 GMT
சிங்கப்பூரில் இருந்து 175 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானத்தில் சாம்சங் செல்போனில் தீப்பிடித்தது. இதையடுத்து, சாம்சங் கம்பெனி நிர்வாகிகள் 26-ந்தேதி நேரில் ஆஜராக ‘சம்மன்’ அனுப்பப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சிங்கப்பூரில் இருந்து 175 பயணிகளுடன் சென்னைக்கு வந்த விமானத்தில் சாம்சங் செல்போனில் தீப்பிடித்தது. இதையடுத்து, சாம்சங் கம்பெனி நிர்வாகிகள் 26-ந்தேதி நேரில் ஆஜராக ‘சம்மன்’ அனுப்பப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட்-7 என்ற நவீனரக ஸ்மார்ட் போன்களின் பேட்டரிகள் வெடித்த சம்பவம், பல நாடுகளில் நடைபெற்றுள்ளது. அதனால், சாம்சங் கேலக்ஸி நோட்-7 ரக ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் விமானங்களில் பயன்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் சமீபத்தில் தடை விதித்தது.

இந்நிலையில், சாம்சங் கேலக்ஸி நோட்-2 ரக ஸ்மார்ட் போன் தீப்பிடித்து எரிந்த சம்பவம், இந்தியாவில் முதல்முறையாக நேற்று நடந்தது. சிங்கப்பூரில் இருந்து 175 பயணிகளுடன் இண்டிகோ விமானம் ஒன்று நேற்று சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க தயாரானபோது, திடீரென புகை வாசனை அடிப்பதை பயணிகள் உணர்ந்தனர். இதுபற்றி விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தனர்.

பயணிகளின் இருக்கைக்கு மேல் உடைமைகள் வைக்கும் பகுதியில் இருந்து புகை வருவதை விமான பணிப்பெண்கள் கண்டனர். உடனே இது பற்றி விமானிக்கு தகவல் தந்தனர். விமானியும், விமான பணிப்பெண்களும், உடைமைகள் இருந்த பகுதியை திறந்து பார்த்தபோது ஒரு பெண் பயணியின் சூட்கேசில் இருந்து புகை வந்ததை கண்டுபிடித்தனர். உடனே அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது சாம்சங் கேலக்ஸி நோட்-2 என்ற ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்ததை கண்டனர்.

கழிவறையில் உள்ள ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி அதில் தீப்பிடித்த செல்போனை போட்டு வைத்தனர். பின்னர் இது பற்றி சென்னை விமான நிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்தில் அவசரகால ஏற்பாடுகள் செய்யப்பட்டன. விமானம் சென்னையில் பத்திரமாக தரையிறங்கியது. 175 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறினர்.

பின்னர், பெண் பயணியிடம் எழுதி வாங்கிக் கொண்டு தீப்பிடித்த செல்போனை ஒப்படைத்தனர். இதுபற்றி சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்திடம் புகார் செய்யப்பட்டது. சாம்சங் செல்போன் தீப்பிடித்த விவகாரம் குறித்து 26-ந்தேதி நேரில் விளக்கம் அளிக்குமாறு சாம்சங் நிறுவனத்துக்கு ‘சம்மன்’ அனுப்பப்பட்டது.

மேலும் விமானங்களில் ஏற வரும் பயணிகள், தங்கள் சாம்சங் கேலக்ஸி நோட் ரக செல்போன்களை அணைத்து வைக்க விமான பணிப்பெண்கள் வலியுறுத்த வேண்டும் என இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News